Latestமலேசியா

ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதியப் பாடம்; பழைய சாமான்களில் _power bank_கை உருவாக்கிய காஜாங் மாணவரின் இரகசியம்

காஜாங், ஏப்ரல்-25, சிலாங்கூர், காஜாங்கில், தன் வயதொத்த மாணவர்களைப் போல் அல்லாமல், தொழில்நுட்பத்தில் மூழ்கி சத்தமில்லாமல் சாதித்து வருகிறார் 17 வயதே நிரம்பிய பவனேஷ் பால சுப்ரமணியம்.

மனிதர்களின் அன்றார் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தொழில்நுட்பத் தொழில்முனைவோராக உருவாகும் எண்ணத்தைக் கொண்டுள்ளவரை, வணக்கம் மலேசியா அண்மையில் பேட்டி கண்டது.

8 வயதிலிருந்தே ஆர்வமும், தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பமும்தான் என்னைத் தூண்டி வருகிறது.

ஆராய்வதற்கு எப்போதும் புதிதாக ஏதாவது இருக்கும்; நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சவாலையும் நான் விரும்புகிறேன் என்கிறார் இவர்.

என் தந்தையே எனக்கு முன்மாதிரி; உடைந்த தொடர்பு சாதனக் கருவிகள், கணினிகள் போன்றவற்றை எப்படி சரிசெய்வது போன்றவற்றை அவரைப் பார்த்தே வளர்த்தேன் என புகழாரம் சூட்டினார் பவனேஷ்.

நிச்சயமாக, எந்தத் திட்டமும் தடைகள் இல்லாமல் வராது.

பவனேஷ் தனது _power bank_கை உருவாக்கும் போது பல சவால்களை எதிர்கொண்டார் – குறிப்பாக பேட்டரி விரைவில் தேய்வதையும் சோதனையின் போது அதிக வெப்பமடைதலையும் கூறலாம்.

எனினும், மனம் தளராது பல்வேறு சோதனைகளுக்கும், புதுப்பிப்புகளுக்கும் பிறகு அவர் வெற்றிகரமாக _power bank_கை உருவாக்கினார்.

வணிக ரீதியான _power bank_களைப் போலன்றி, தன்னுடையது முற்றிலும் மாடுலர் மற்றும் பழுதுபார்க்கக்கூடியது என்கிறார் அவர்.

அதைப் பிரித்து தேவைக்கேற்ப மறுவடிவமைப்பு செய்ய முடியும்; மேலும் புதிய சார்ஜிங் முறைகளையும் அதில் அவர் சேர்த்துள்ளார்.

அவர் சொந்தமாக _power bank_கை உருவாக்கியதற்கே நாம் வாயைப் பிளந்தால், தமது அடுத்தத் திட்டத்தைக் கூறி மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார் பவனேஷ்.

ஆம், விவேகத் தாவர கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதே அது.

இணையம் மற்றும் AI ஆகியவற்றைப் யன்படுத்தி தண்ணீர், காற்று அல்லது சூரிய ஒளி தேவையில்லாமல் தாவரங்கள் வளர உதவுவதே அவ்வமைப்பாகும்.

சிறு வயதாக இருப்பதால் என் கண்டுபிடிப்புகள் பற்றி பலரும் பெரும்பாலும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை; ஆனால் அவர்கள் துச்சமாக நினைக்க நினைக்கத் தான், எனக்குள் உத்வேகமும் அதிகரித்தது.

புத்தாக்கத்திற்கு விலையுயர்ந்த உபகரணங்களோ பயிற்சியோ தேவையில்லை; ஆர்வம்தான் முக்கியம் எனவும் பவனேஷ் சொல்கிறார்.

அடுத்த 10 ஆண்டுகளில், புத்தாக்கங்களை உருவாக்கி, எல்லைகளைத் தாண்டி ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பத் தொழில்முனைவோராக உயருவேன் என பவனேஷ் திடமாக நம்புகிறார்.

அவரின் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோமே!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!