
பாலிங், ஜனவரி-30, கெடா, பாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தும்பா தமிழ்ப்பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கத்தும்பா தோட்டத்தில் செயல்பட்ட கத்தும்பா தமிழ்ப்பள்ளி, கடந்தாண்டு ஏப்ரலில் கல்வியமைச்சின் ஆலோசனையின் பேரில் பெக்கான் தாவார் தேசியப் பள்ளியில் இணைக்க கட்டாயமாக நகர்த்தப்பட்டது.
பின்னர், இவ்வாண்டு தொடக்கத்தில், பெக்கான் தாவார் தேசியப் பள்ளியில் புதிய கட்டட கட்டுமானம் என்ற பெயரில், கத்தும்பா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்குச் சென்றிட கல்வி இலாகா நடவடிக்கை எடுத்தது.
இத்தகையக் கட்டாய மாற்றங்கள் மற்றும் மாற்று திட்டங்களை, கத்தும்பா தமிழ்ப்பள்ளியை மூடுவதற்கான திட்டமாகப் பார்க்காமல் வேறெப்படி பார்ப்பதென, கத்தும்பா தமிழ்ப்பள்ளி வாரியக்குழுத் தலைவர் கிருஷ்ணா முனியாண்டி கேட்கிறார்.
தமிழ்ப்பள்ளிகள் கல்வி மட்டும் அல்லாமல், மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை காக்கும் அரிய பொக்கிஷமாக உள்ளன.
இந்நிலையில், கத்தும்பா தமிழ்ப்பள்ளி மூடப்பட்டால் அவ்வட்டார தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என அவர் வேதனைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், மடானி அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் இறங்கி இந்த கத்தும்பா தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்ற வேண்டுமென, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ம.வெற்றிவேலன் கேட்டுக் கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
தனி சமூகத்திற்கும் மொழிக்குமான உரிமைகளைப் பறிக்காத விதத்தில் கல்வி நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
எனவே இவ்விஷயத்தில் அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென வெற்றிவேலன் வலியுறுத்தினார்.