
ஷா ஆலாம், நவம்பர்-15, கிள்ளான் ஜாலான் கம்போங் பாப்பான் பகுதியில் இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகள் வழங்கப்படும்.
Permodalan Negeri Selangor Berhad மூலம் அத்திட்டம் மேற்கொள்ளப்படும் என, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதுவரை குடும்பங்கள் Smart Sewa திட்டத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவர்.
ஒருவேளை அதில் நிதிப் பிரச்னை இருந்தால் தாராளமாகப் பேசலாம் என்றார் அவர்.
கம்போங் பாப்பான் நில உரிமை விவகாரத்தை, குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாதிருந்தால், அப்பிரச்னைக்கு சுமூகமாகத் தீர்வு கண்டிருக்கலாம் என அமிருடின் சொன்னார்.
ஆனால், இப்பிரச்னை அரசியல் மற்றும் மனித உரிமை விவாதமாகவும் மாறியுள்ளது.
குறிப்பாக கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு திறந்த மடல் எழுதி, போலீஸாரின் கடுமையான கைது நடவடிக்கைகளை கண்டித்துள்ளார்.
குடியிருப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டது ‘மலேசியா மடானி’ கொள்கைக்கு முரணானது என அவர் கூறினார்.
மாநில அரசு 99,000 ரிங்கிட் மதிப்புள்ள இருமாடி terrace வீடுகளை வழங்குமென கொடுக்கப்பட்ட வாக்குறுதியையும் சாந்தியாகோ மீண்டும் நினைவூட்டினார்.
இந்நிலையில் கைதுச் செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவும், போலீஸாரின் கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தவும் சார்ல்ஸ் பிரதமரை வலியுறுத்தினார்.



