
கோலாலம்பூர், ஜன 24- கோலாலம்பூர், கம்போங் பாரு, ஜாலான் ராஜா மூடா மூசாவில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வீட்டின் கூரை மீது ஏறி தப்ப முயன்ற ஆடவன் உட்பட 38 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். வாடகை்ககு கிடைக்கப்பெற்ற நிலத்தில் கொள்கலன்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகளில் அந்த சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருந்தனர். தலைநகரின் மையப் பகுதியில் கட்டப்பட்டிருந்த அந்த வீடுகளின் அறைகள் சிறிதாக இருந்தாலும் அவற்றில் சட்டவிரோத குடியேறிகளில் பலர் தங்கியிருந்தது கண்டுப் பிடிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் இந்தேனேசிய பிரஜைகளாவர்.
அதிகாலை மணி 2.30 க்கு தொடங்கப்பட்ட அந்த நடவடிக்கையில் மொத்தம் 59 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் பெர்மிட் எதுவும் இன்றி நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் வான் முகமட் சவ்பி ( Wan Mohammed Saupee ) தெரிவித்தார். இவர்களில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 ஆடவர்கள், 14 பெண்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த இரு ஆடவர்களும் அடங்குவர்.