
கர்நாடகா, நவம்பர் 20 – கடந்த திங்கட்கிழமை கர்நாடகாவில் 12 வயது யானை நீர் அருந்த சென்றபோது, வேகமான நீரோட்டத்தின் காரணமாக கால்வாயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
தகவல் அறிந்த வனத்துறை மீட்பு பணி வேலைகளை உடனடியாக துவங்கினாலும், அணையின் நீர்மட்டம் அதிகமாக இருந்ததால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது. பின்பு நீர்மட்டத்தை குறைத்த பின்னர் புதிய திட்டத்தை உருவாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை மீட்பு பணி வேலைகள் மீண்டும் தொடரப்பட்டது.
பெங்களூரிலிருந்து ஹைட்ராலிக் கிரேன் கொண்டு வரப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் வன மருத்துவர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு அதனை அரைமயக்க நிலையில் கயிறுகள் மற்றும் சில உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட யானை, வனவிலங்கு சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது சீரான நிலையில் இருப்பதை உறுதி செய்த பின்னர் அதிகாரிகள் அதனை வனத்தில் விட்டனர்.



