
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், தான் ஸ்ரீ சோமா அரங்கில் தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் சிந்தனைக்கும் செயலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட அவ்விழாவில், மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் நடராசன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் திருமாவளவன், முனைவர் இளம்பூரணன், பா.வளர்மதி செல்வம், பிரவீணா வாசன் போன்றோர் உரையாற்றினர்.
இடைநிலைப் பள்ளி மாணவர்களின் கருத்தாடல், கவிதை, மேடைப்பேச்சு, பாடல்கள், நடனப் பள்ளி மாணவர்களின் நடனங்கள் ஆகியவை நிகழ்ச்சிக்குப் மெருகூட்டின.
தமிழுணர்வையும் அதன் பண்பாட்டுச் சிறப்பினையும், தமிழர் இன மான உணர்வினை மேம்படுத்தும் வகையிலும், தமிழர் தனித்தன்மைகளை வெளிக்கொணரும் வகையில் இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டது.
இதில், தமிழ் ஆர்வலர்களும் பற்றாளர்களும் குடும்பத்தோடு தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்து கலந்துகொண்டது சிறப்பம்சமாக விளங்கியது.