
கூலாய், ஜூலை-13- ஜூன் 24 கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, நேற்று சனிக்கிழமை ஜோகூர் கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியில் கண்ணதாசன் சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கூலாய் ஸ்ரீ சங்கீதா பிரியா நற்பணி மன்றத்தின் ஆதரவில், ஆசிரியர்கள் மலர்கொடி மற்றும் மீனா இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜோகூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர்ப்பள்ளி உதவி இயக்குநர் இரா.இரவிச்சந்திரன் நிகழ்வுக்குத் தலைமைத் தாங்கினார்.
‘கண்ணதாசன் பாடல்களில் காலத்தை வென்று நிற்கும் காதலும் தத்துவமும்’ என்ற தலைப்பில், தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் அ.சு.பாஸ்கரன் சொற்பொழிவாற்றினார்.
காதல் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசனின் ஆழமான அர்த்தங்கள் பொதிந்த தத்துவப் பாடல் வரிகளையும் அழகாக எடுத்துகூறியும், பாடியும் பாஸ்கரன் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொது மக்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டனர்.
இது போன்ற நிகழ்ச்சிகளின் வழி தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியங்களின் கூறுகளை சமுதாய மத்தியில் கொண்டுசெல்ல முடியும் என வருகை தந்தோர் தெரிவித்தனர்.
ஜோகூர் தமிழ் கல்வியாளர் சமூக நல மேம்பாட்டு இயக்கத்தினர், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்’ என்ற சுலோகத்தை ஏந்திய, கார் ஸ்டிக்கர்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என பாடிய கவிஞர் கண்ணதாசன், இன்றும் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதை இந்நிகழ்வு பறைசாற்றியது.