
பைத்துல் மக்திஸ், ஆகஸ்ட்-13 – காசாவில் பசியும் பட்டினியும் மோசமாகி வருவதால், அங்கு 97 டன் உணவுப் பொருட்கள் ஆகாய மார்க்கமாக தரையிறக்கப்பட்டுள்ளன.
காசா தீபகற்பத்தில் விமானங்களிலிருந்து வான்குடைகள் மூலம் அப்பொட்டலங்கள் வந்து விழுந்த போது, அவற்றை நோக்கி பாலஸ்தீன மக்கள் துள்ளிக் குதித்து ஓடிய காட்சிகள் வைரலாகியுள்ளன.
ஐக்கிய அரபு சிற்றரசு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி ஆகிய 5 நாடுகள் அவற்றை அனுப்பியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
அரசியல் ஏற்பாட்டின் மூலம் இவ்வுதவிகள் வந்திருப்பதாகவும், வெளிநாடுகளின் உதவியுடன் இது தொடரும் என்றும் இஸ்ரேல் கூறிக் கொண்டது.
காசாவில் அனைத்து வயதினரையும் உட்படுத்திய பசி பட்டினி கவலைக்கிடமான நிலையை எட்டியிருப்பதாக அங்குள்ள மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக 5 வயதுக்கும் கீழ்பட்ட 350,000 சிறார்கள் பல்வேறு ஆரோக்கியப் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறையாலும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பசி பட்டினியில் இதுவரை மரணமடைந்தோரின் எண்ணிக்கை 227 பேராக அதிகரித்துள்ளது.
அவர்களில் 103 பேர் குழந்தைகள் ஆவர்.