
காஜாங், ஜூலை 9 – இன்று ஹுலு லங்காட் ஜாலான் குவாரி சுங்கை லாங் அருகேயுள்ள ஆற்றில் வாகனம் ஒன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிலிருந்து தப்பிச் சென்ற கணவன் மனைவி இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்று காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறியுள்ளார்.
அந்த 2 சந்தேக நபர்களும் தாங்கள் திருடிய கேபிள் வயர்களை வாடகை காரில் ஏற்றி தப்பிச் செல்லும்பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது.
காலை மணி 9க்கு ஆற்றுப் பகுதியிலிருந்து பெரிய சத்தம் ஒன்று கேட்டதென்றும், அருகில் சென்று பார்த்தபொழுது ஆற்றில் விழுந்த வாகனத்திலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் இறங்கி ஓடினர் என்றும் ஆடவர் ஒருவர் காவல்துறையினரிடம் விளக்கமளித்துள்ளார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) மேற்கொண்ட மீட்பு பணி நடவடிக்கையில் வாகனம் வெற்றிகரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறையினரை உடனடியாக அணுக வேண்டுமென்றும் பயனர்கள் சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனத்தை செலுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.