லண்டன், நவம்பர்-22 – எங்கோ ஒரு மூலையிலிருக்கும் உலகின் மிக உயரமான மனிதரும் மிகக் குள்ளமான மனிதரும் சந்திப்பது மிக அரிது.
ஒருவேளை சந்தித்தால் அந்த இடம் எப்படியிருக்கும்? அப்படியோர் அரிதான நிகழ்வு தான் கின்னஸ் உலகச் சாதனை நாளில் சாத்தியமாகியுள்ளது.
ஆண்டுதோறும் கின்னஸ் உலகச் சாதனை நாளாக நவம்பர் 13-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை ஒட்டி, லண்டனில் நடைபெற்ற பகல் தேநீர் விருந்தில் அச்சந்திப்பு நடைபெற்றது.
உலகின் மிக உயரமான பெண்மணியான துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேசா கெலிகோ (Rumeysa Geligo), உலகின் மிகக் குள்ளமான பெண்மணியான இந்தியாவின் ஜோதி அம்கேவுடன் (Jyoti Amge) தேநீர் அருந்தினார்.
இருவரும் தேநீர் அருந்திகொண்டே சிரித்து பேசும் புகைப்படங்கள் வைரலாகி வலைத்தளவாசிகளை கவர்ந்து வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 30 வயது ஜோதி 62.8 சென்டி மீட்டர் அல்லது 2 அடி முக்கால் அங்குல உயரத்தோடு, 2011-ஆம் ஆண்டிலிருந்து உலகின் மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ் சாதனையை வைத்துள்ளார்.
அதே சமயம் 27 வயது ஆராய்ச்சியாளரான ருமேசா, 215.16 சென்டி மீட்டர் அல்லது 7 அடி 7 அங்குல உயரத்துடன், கடந்த மூன்றாண்டுகளாக உலகின் மிக உயரமான பெண்ணாக வலம் வருகிறார்.
ஜோதி அம்கே, மாடலிங் மற்றும் நடிப்புத் துறையிலும் ஈடுபட்டு ஆச்சரியமூட்டுகிறார்.
வாழ்க்கையை நிறையாக மட்டுமே பார்த்து சவால்களைக் கடந்துசெல்லும் இருவரும் நிச்சயமாக நமக்கெல்லாம் முன்மாதிரி தான்.