
வாஷிங்டன், டிசம்பர்-13, தாய்லாந்து–கம்போடியா எல்லைப் பகுதியில் நடந்துவரும் மோதல்களை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் மட்டுமே அம்மோதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இரு நாடுகளின் தலைவர்களுடன் நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஏற்கனவே காணப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அவர்கள் இணங்கியதாக ட்ரம்ப் கூறினார்.
எல்லையில் உயிரிழப்பும், மக்கள் இடம்பெயர்வும் தொடரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், போர் நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வந்ததா என்பதில் முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில பகுதிகளில் இன்னும் பதற்றம் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீண்ட கால எல்லை தகராறு காரணமாக உருவான இந்த மோதலை, ஆசியான் நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
போர் நிறுத்தம் முழுமையாக அமுல்படுமா என்பது, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே இருக்கும் என தெரிகிறது.
இந்த மோதலைத் தொடர்ந்து, தாய்லாந்தில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகளிலிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக கம்போடியா பாதியிலேயே விலகியதும் குறிப்பிடத்தக்கது.



