
கோலாலம்பூர், மார்ச்-5 – Lamborghini Aventador S சொகுசுக் காரை வாங்கும் ஆர்வத்தில் 2.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைச் செலுத்திய ஒரு தொழிலதிபர், காரை விற்பதாகக் கூறியவர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதால் மோசம் போயுள்ளார்.
34 வயது வயது அவ்வாடவர், 2020-ல் சந்தேக நபரைச் சந்தித்தார்.
பாதிக்கப்பட்டவரிடம் 2.4 மில்லியன் ரிங்கிட்டுக்கு அந்த சூப்பர் காரை விற்பதற்கு ஒப்புக் கொண்ட சந்தேக நபர், சிலாங்கூர், பூச்சோங்கில் உள்ள மோட்டார் நிறுவனமொன்றில் அதே இரகக் காரை சோதனை ஓட்டம் செய்துப் பார்க்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனால் நம்பிக்கை வந்து, கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு 18 தடவையாக அந்த தொழிலதிபர் பணத்தைச் செலுத்தினார்; இருப்பினும், 2022 ஜனவரியில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதற்கான அறிவிப்பின் படங்களை அவர் பெற்றார்.
நியாயம் கேட்டதும், பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த சந்தேக நபர், கார் உரிமையை மாற்றித் தருவதோடு, புகார்தாரரின் பெயரில் காரை பதிவுச் செய்யவும் ஒப்புக் கொண்டார்.
ஆனால் இன்று வரை தம்மிடம் கார் வந்து சேர்ந்தபாடில்லை என பாதிக்கப்பட்டவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து, மோசடி செய்ததன் பேரில் குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது பிரிவின் கீழ் சந்தேக நபர் தேடப்படுகிறார்.
கடைசியாக ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் சுங்கை பீசி, ஸ்ரீ இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த Lim Voi Heng என்பவரே சந்தேக நபராவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும், பிரம்படியும், அபராதமும் விதிக்கப்படலாம் என போலீஸ் கூறியது.