
ஷா அலாம், மார்ச் 28 – கார் மீது ஏறிய குரங்கு சுமார் 20 நிமிடம் காரிலேயே இருந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான பெண் காரோட்டி ஒருவர் அருகேயுள்ள தீயணைப்பு நிலையத்திற்கு மெதுவாக காரை ஓட்டிச் சென்று அக்குரங்கை பாதுகாப்புடன் கொண்டு சேர்த்தார்.
கோலாலம்பூரில் கூச்சாய் லமாவிலுள்ள அலுவலகத்திலிருந்து வேலை முடிந்து மற்றொரு பணியாளருடன் செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது 52 வயதுடைய சலாமியா முபிட் என்ற பெண்ணுக்கு இந்த மறக்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. தனது அலுவலகத்திற்கு அருகேயுள்ள சாலை சந்திப்பிலிருந்து வெளியேறிபோது அந்த குரங்கு அப்பெண்ணின் காரின் கூரைப்பகுதியில் ஏறியுள்ளது.
தொடக்கத்தில் அந்த குரங்கு அங்கிருந்து வெளியேறிவிட்டதாக அவர் நினைத்தார். ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு அவரது காரை கடந்துச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காரில் ஏதோ ஒன்று அமர்ந்திருப்பதை தெரிவிக்கும் சைகையை காட்டிச் சென்றுள்ளார். உடனடியாக அந்த பெண் காரை நகத்தி பின்னால் பார்த்தபோது போனட் பகுதியில் குரங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வேறு வழியின்றி தனது காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள துன் டாக்டர் இஸ்மாயில் தீயணைப்பு நிலையத்தை சென்றடைந்த சலாமியா பின்னர் அங்கிருந்த தீயணைப்பு வீரரிடம் அந்த குரங்கை காரிலிருந்து அகற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார். தனது காரை மெதுவாக ஓட்டிச் சென்றதால் இதர வாகன ஓட்டுனர்களுக்கு தொல்லையாக இருந்தபோதிலும் கார் மீது அமர்ந்திருந்த குரங்கை பாதுகாப்புடன் தீயணைப்பு நிலையத்தில் சேர்த்துவிடுவதில்தான் தனது சிந்தனை இருந்ததாக பேராவைச் சேர்ந்த சலாமியா விவரித்தார். பரபரப்பான சாலைப் பகுதியில் அந்த குரங்கு எந்தவொரு பயமும் இன்றி தனது காரின் பின்புற போனட்டில் சவகாசமாக அமர்ந்து பயணம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்