
கோலாலம்பூர், மார்ச்-12 – Facebook-கிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரியப் பதிவை சம்ரி வினோத் மீண்டும் பதிவேற்றினாரா என்பதை, மலேசியத் தொடர்ப்பு – பல்லூடக ஆணையமான MCMC விசாரித்து வருகிறது.
அவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ள தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், விசாரணை முடிந்ததும் அவ்வாணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
சமூக ஊடகங்களின் விதிமுறைகளையோ வழிகாட்டிகளையோ மீறும் பதிவுகளை நீக்குவது அவற்றின் உரிமையாகும்.
சம்ரி வினோத் விவகாரத்தில், அந்த இஸ்லாமிய சமய சொற்பொழிவாளரின் பதிவு சமூக வழிகாட்டுதல்களை மீறியதாகக் கருதி facebook அதனை நீக்கியிருந்தது என ஃபாஹ்மி சொன்னார்.
எனினும், இந்துக்களின் காவடியாட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலான கருத்தை, சம்ரி வினோத் மறு பதிவேற்றம் செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இத்தனை நடந்தும், என்ன தைரியமிருந்தால் அவரால் அதனை மீண்டும் பதிவேற்ற முடியுமென சமூகத் தலைவர்களும் மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இன – மத பதற்றத்தை தொடர்ந்து தூண்டி வருவதால் அவரை கைதுச் செய்தே ஆக வேண்டுமென்றக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.