கோலாலம்பூர், நவம்பர்-25, கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட 5 பகுதிகளில் வசிப்போர், நாட்டில் மிக அதிகமான மாதாந்திர அடிப்படைச் செலவினங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகியவையே அந்த 5 இடங்களாகும்.
அப்பகுதி வாழ் குடும்பங்கள், குறைந்தது 4 பேரது செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.
அதற்கு மாதந்தோறும் 5,188 ரிங்கிட்டிலிருந்து 6,490 ரிங்கிட் வரையில் அக்குடும்பங்களுக்குத் தேவைப்படுவது, PAKW எனப்படும் ஒரு சராசரி வாழ்க்கைக்கான அடிப்படைச் செலவுகளைக் கணக்கிட புள்ளிவிவரத் துறை உருவாக்கிய செயலியில் தெரிய வந்துள்ளது.
PAKW என்பது, உணவு, சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது போன்ற அவசிய மற்றும் விருப்பச் செலவுகளுக்கு குடும்பங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ மாதந்தோறும் தேவைப்படும் அடிப்படைத் தொகையைக் குறிக்கிறது.
ஜோகூர் பாரு, சிரம்பான், குவாந்தான், கூச்சிங் போன்ற மற்ற முக்கிய நகரங்களும் அதே போன்ற உயரிய விகிதத்தைப் பதிவுச் செய்துள்ளன.
அவற்றில் சில இடங்களுக்கான PAKW விகிதம், மாதம் 6,000 ரிங்கிட்டை தாண்டி விடுகிறது.
அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட மானிய முறை அமுலாக்கத்திற்கும் இதர உதவிகளுக்கும் பயன்படுத்தப்படும் குறியீடுகளில் இந்த PAKW குறியீடும் ஒன்றாகும்.
இக்குறியீட்டில், இடம் மற்றும் வயது, பாலினம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற மக்கள்தொகை தன்மை ஆகிய 2 அம்சங்களின் தாக்கமிருக்கும்.
மலேசியக் குடும்பங்களுக்கான சராசரி PAKW குறியீட்டை பார்த்தால், கடந்தாண்டு 3.8 பேரைக் கொண்ட குடும்பத்திற்கு மாதத்திற்கு 4,729 ரிங்கிட் தேவைப்பட்டுள்ளது.