
கோலாலம்பூர், பிப் 20 – கிள்ளான் தாமான் கிளாங் ஜெயாவுக்கு அருகே அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் ராஜா மஹாடி தேசிய இடைநிலைப்பள்ளியில் இவ்வாண்டு நான்காம் மற்றும் 5ஆம் படிவம் பயிலும் மாணவர்களுக்கான தமிழ், தமிழ் இலக்கியப் பாடம் பாட அட்டவணை நேரத்திற்கு பிறகு நடைபெறும் என அப்பள்ளியின் நிர்வாகம் செய்த முடிவு குறித்து பெற்றோர்கள் தங்களது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் ஆண்டுதோறும் எஸ். பி.எம் தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களை அதிகமான மாணவர்கள் எடுத்து வந்தனர்.
கடந்த ஆண்டுவரை பள்ளி நேரத்திலேயே அவ்விரு பாடங்களும் போதிக்கப்பட்டு வந்ததால் தமிழ் பாடம் மற்றும் தமிழ் இலக்கிய வகுப்புகளில் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு 4ஆம் படிவத்தில் சுமார் 180 மாணவர்கள் தமிழ் பாடத்தையும், 140 மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தையும் 5ஆம் படிவ மாணவர்களில் தமிழ் பாடம் பயில்வதற்கு 190 பேரும் இலக்கிய பாடத்தை 150 பேரும் பயில்வதற்கு தயாராய் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வேளையில் பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்டு அவ்விரு பாடங்களும் போதிக்கப்படும் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்த முடிவினால் போக்குவரத்து பிரச்னை காரணமாக அதிகமான மாணவர்கள் அப்பாடங்களை படிக்க முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகலாம் என பெற்றோர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரத்திற்கு கல்வி அமைச்சு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.