குவாலா லங்காட், ஜனவரி-21, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மோசமான ஈ தொல்லையால் பாதிக்கப்பட்டதால், சிலாங்கூர், குவாலா லங்காட், தஞ்சோங் செப்பாட்டில் உள்ள ஒரு கோழிப் பண்ணை மூடப்படுகிறது.
3 முறை அபராதம் விதிக்கப்பட்டு விட்டதால், இனி அதனை மூடுவதைத் தவிர வழியில்லை என ஊராட்சி மற்றும் கலாச்சார துறைகளுக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா (Borhan Aman Shah) கூறினார்.
கோழிப்பண்ணை நடத்துபவர்கள் குடியிருப்பாளர்களின் புகார்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இது தான் கதியென்றார் அவர்.
கோழிப் பண்ணையாளர்களுக்கு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட முறையான மேலாண்மை நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம்; ஆனால் விவசாயிகள் பழைய முறைகளுக்கே திரும்பியதால், இந்த ஈ தொல்லை ஏற்பட்டது என பொர்ஹான் சொன்னார்.
கால்நடை சேவைத் துறை, ஊராட்சி மன்றம், சுற்றுச் சூழல் துறை, மாவட்ட நில அலுவலகம், கோழிப் பண்ணையாளர்கள், சமூகப் பிரதிநிதி உள்ளிட்டோர் இது குறித்து ஏற்கனவே விவாதித்துள்ளனர்.
விதிமுறை மீறலுக்காக 3 முறை அபராதம் விதிக்கப்பட்ட பண்ணைகளை மூடுவதற்கு அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக பொர்ஹான் சொன்னார்.
தஞ்சோங் செப்பாட்டில் 104 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்றாண்டுகளாக ஈக்களுடனேயே வாழ்ந்து வருவதாக முன்னதாக செய்தி வெளியாகியிருந்தது.
அங்குள்ள கோழிப் பண்ணையே அப்பிரச்னைக்குக் காரணமென்றும், எனவே அது உடனடியாக மூடப்பட வேண்டுமென்றும் அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.