
ஷா ஆலாம், ஜனவரி-23-ஷா ஆலாமில் செயல்பட்டு வரும் ஒரு கொரியர் நிறுவனம், குறைந்தபட்ச சம்பள சட்டத்தை மீறியதாகக் கூறி, சிலாங்கூர் ஆள்பலத் துறை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த திடீர் சோதனையின் போது, அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே, சில பகுதி நேர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
தவிர, ஊழியர்களுக்கு சம்பள இரசீதுகள் வழங்கப்படாமல், தினசரி ரொக்கமாக சம்பளம் கொடுக்கப்பட்டதும் அம்பலமானது.
தொழிலாளர்களின் சம்பளப் பதிவுகள் மற்றும் தேவையான ஆவணங்களை அந்நிறுவனம் முறையாக பராமரிக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறைந்தபட்ச சம்பள சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆள்பலத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



