கோலாலம்பூர், நவம்பர்-19 – Air-cond எனப்படும் குளிரூட்டி வசதிக்கு வாடிக்கையாளர்களிடம் 30 ரிங்கிட் வரை கூடுதல் கட்டணம் விதிக்கும் e-hailing ஓட்டுநர் ஒருவரின் செயல் வைரலாகி, வலைத்தளவாசிகளைக் கோபமடையச் செய்துள்ளது.
அக்கூடுதல் கட்டண விவரங்கள் அடங்கிய அட்டைத் தாளை, காரின் பின்னிருக்கைப் பயணிகளின் கண்ணில் படுமாறு அவர் தொங்கவிட்டுள்ள படமே வைரலாகியுள்ளது.
பயணிகள் குளிரூட்டி வசதியைக் கேட்கும் பட்சத்தில், air-cond வேகத்தைப் பொருத்து 20, 25 மற்றும் 30 ரிங்கிட் என அவர் கட்டணத்தை நிர்ணயித்துள்ளார்.
முன்னிறுக்கைப் பயணிக்கு மட்டும் அடிப்படை குளிரூட்டி வசதி தரப்படுமென்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
தற்காலத்தில் அனைவரின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகி விட்ட குளிரூட்டி வசதிக்குக் கூடுதல் கட்டணம் விதிப்பதா என வலைத்தளப் பயனர்கள் கொந்தளிக்கின்றனர்.
என்னமோ மாதா மாதம் குளிரூட்டியை அவர் சர்வீஸ் பரிசோதனைக்குக் கொண்டுச் செல்வது போல் அல்லவா நம்மிடம் அவர் கூடுதல் கட்டணம் கேட்கிறார் என X பயனர் ஒருவர் கடிந்துகொண்டார்.
முன்னாள் பகுதி நேர e-hailing ஓட்டுநர் ஒருவர் பதிவிட்ட கருத்தில், e-hailing ஓட்டுநர்களின் சிரமங்களையும் சவால்களையும் புரிந்துகொள்ள முடியுமென்றாலும், அதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்றார்.
@malaysiavirall என்ற X தளத்தில் வைரலான அப்புகைப்படம் இதுவரை 906,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.