குளுவாங், நவம்பர்-16, ஜோகூர், குளுவாங் Jalan Laksamana Sunrise Park அருகே உள்ள ஒரு வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் அங்கேயே இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தான்.
நேற்றிரவு 7 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், வலது கையில் காயங்களுடன் அவன் இறந்து கிடந்ததாகக் குளுவாங் மாவட்டப் போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடென்டண்ட் Nik Mohd Azmi Husin கூறினார்.
இரும்பு வேலியிலிருந்து வீட்டினுள்ளே குதிக்கும் போது காயம் பட்டதா அல்லது பொது மக்களும் போலீசும் வருவது தெரிந்து ஓட முயன்ற போது காயமடைந்து அவன் உயிரிழந்தானா என்பது விசாரிக்கப்படுகிறது.
முன்னதாகத் தனது 3 கூட்டாளிகளுடன் அவ்வீட்டை உடைத்து அவன் உள்ளே போன தகவல் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
சரியான நேரத்தில் வந்து சேர்ந்த போலீசார் இருவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
தப்பியோடிய 39 வயது கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.