
கோலாலம்பூர்: சமீபத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பிரிட்டிஷ் இளைஞன் டேவிட் பாலிசோங், கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) வந்த பிறகு, கேஎல் சென்ட்ரலுக்கு பேருந்தில் ஏறி சென்றுள்ளார் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த இளைஞன் மலேசியாவுக்கு வந்ததற்கான உண்மையான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லையென்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மலேசிய குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், அவர் மலேசியாவிலிருந்து வெளியேறியதாக எந்த தகவலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டேவிட்டின் தாயார் விரைவில் மலேசியாவுக்கு வருவார் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
இளைஞர் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.