
புத்ராஜெயா, மார்ச்-24 -வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு குறித்து டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக மேல் முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை எதிர்க்க, தேசிய சட்டத் துறை தலைவர் செய்த மனுவை நிராகரிக்கக் கோரும் முயற்சியில், அந்த முன்னாள் பிரதமர் தோல்வி கண்டுள்ளார்.
வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாவியி அப்துல்லா (Tan Sri Muhammad Shafee Abdullah) வாயிலாக நஜீப் செய்த தொடக்கக் கட்ட ஆட்சேபனையை, மூவரடங்கிய புத்ராஜெயா கூட்டரசு நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்தது.
தம்மை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு இருப்பதை அரசாங்கமும் இதர 6 தரப்புகளும் உறுதிச் செய்ய கட்டாயப்படுத்தக் கோரி, நஜீப் செய்த விண்ணப்பத்தை ஜனவரி 6-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதனை எதிர்த்தே சட்டத் துறைத் தலைவர் மனு செய்துள்ளார்.
கூடுதல் உத்தரவுத் தொடர்பான நஜீப்பின் மனுவை கடந்தாண்டு ஜூலை 3-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவரின் விண்ணப்பத்தை ஆதரிக்கும் வகையில் உடன் சமர்ப்பிக்கப்பட்ட அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி உள்ளிட்ட நால்வரின் அஃபிடாவிட் (afidavit) மனுக்கள், வெறும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை; எனவே அவற்றை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் அப்போது தனது தீர்ப்பில் கூறியது.
அதை எதிர்த்தே நஜீப் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார்.
42 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய SRC International ஊழல் வழக்கில் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை நஜீப் வீட்டில் கழிக்க ஏதுவாக, 16-ஆவது மாமன்னர் அந்த கூடுதல் உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.