
கெய்ரோ, அக்டோபர்-27,
தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை யஷ்மிதா ஜாதிஷ் குமார், நேற்று சுவிட்சர்லாந்தின் உஸ்டரில் நடைபெற்ற சுவிஸ் பொது விருதுப் போட்டியில் பட்டத்தை வாகை சூடினார்.
இதன் மூலம், தனது படிப்பை ஒத்திவைத்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பயிற்சிப் பெற அவரெடுத்த முடிவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
உலகத் தர வரிசையில் 80-ஆவது இடத்தில் உள்ள யஷ்மிதா, எகிப்தின் நாட்டுப் போட்டியாளரை வெறும் 28 நிமிடங்களில் 11-5, 12-10, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பெண்களுக்கான தனிநபர் பிரிவில் பட்டத்தை வென்றார்.
21 வயது யஷ்மிதா, இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது வணிக மேலாண்மை படிப்பிலிருந்து ஒரு வருட இடைவெளி எடுத்துக்கொண்டு கெய்ரோவில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது நான்காவது தொழில்முறை பட்டத்தை வென்றதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டவர், இவ்வெற்றி அர்த்தம் வாய்ந்தது என வருணித்தார்.
ஒரு மாதத்திற்கு முன்புதான் கெய்ரோவுக்கு குடிபெயர்ந்தவரான யஷ்மிதா, ஒரு புதிய நாட்டில் தனியாக வாழ்வது கடினம் என்றாலும் மிகவும் கடினமாக உழைத்ததாகக் குறிப்பிட்டார்.
இதே உற்சாத்தோடு, இன்னும் 3 வாரங்களில் பிரான்ஸில் நடைபெறும் போட்டியில் மற்றொரு நல்ல முடிவைப் பெறவும் அவர் இலக்குக் கொண்டுள்ளார்.
பெற்றோரின் முழுச் செலவில் யஷ்மிதா கெய்ரோவில் பயிற்சிப் பெறுகிறார்.



