
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28 – KLCC மற்றும் கோம்பாக் இடையில் இருக்கும் பத்து LRT நிலையங்கள் ஆகஸ்ட் 9 முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை, வார இறுதி நாட்களில் காலை 9 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசரானா கெலானா ஜெயா பாதையிலிருக்கும் சமிக்ஞை அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கை 2 ஆம் கட்டத்தை நோக்கி நகர்வதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அக்டோபர் 11 முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை 3 ஆம் கட்ட மேம்படுத்துதல் தொடங்கப்படவிருப்பதால் கே.எல் சென்ட்ரல், பசார் சேனி, மஸ்ஜித் ஜமேக் மற்றும் KLCC உட்பட லெம்பா சுபாங் மற்றும் அம்பாங் பார்க் இடையேயான 17 நிலையங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998 முதல் பயன்பாட்டில் உள்ள கெலனா ஜெயா பாதையின் அசல் தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பை மாற்றுவதற்காக இந்த மேம்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது என்று பிரசரானா குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் ப்ரோடியூட் தத் (Dr Prodyut Dutt) கூறியுள்ளார்.
சேவை தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்கும் பிரசரானா ஷட்டில் ரயில்கள், மாற்று பேருந்துகள் மற்றும் இடைநிலை வேன்கஅறிமுகப்படுத்தவுள்ளது.
10 நிலையங்களை உள்ளடக்கிய 2 ஆம் கட்ட மேம்பாட்டின் போது 7,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் 3 ஆம் கட்ட மேம்பாட்டில் அந்த எண்ணிக்கை சுமார் 20,000 ஆக உயரும் என்றும் பிரசரானா கணித்துள்ளது.
வார இறுதி நாட்களில் பயணம் செய்யும் போது, முன்கூட்டியே திட்டமிடவும், நேரடி புதுப்பிப்புகளைச் சரிபார்க்க பல்ஸ் செயலியைப் பயன்படுத்தவும், மாற்று ஏற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவும் பயணிகளுக்கு பிரசரானா அறிவுறுத்தியுள்ளது.