
காசர்கோடு, அக்டோபர்-29, இந்தியா, கேரளாவில் பிரசித்திப் பெற்ற நீலேஸ்வரம் கோயில் காளியாட்ட திருவிழாவில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 150 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 97 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வேளை, 8 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவிழாவின் போது வாணவேடிக்கை நடத்தப்பட்டதில் தீப்பொறிகள் அங்குள்ள பட்டாசு கிடங்கில் விழுந்ததே பெருவெடிப்புக்குக் காரணமென தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
30,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் கருகியுள்ள நிலையில், அவையனைத்தும் உரிய அனுமதிப் பெறாமல் வாங்கி பதுக்கி வைக்கப்பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விசாரணைக்காக கோயில் தலைவர் மற்றும் செயலாளர் என இருவரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
திருவிழாவின் போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு கிடங்கு வெடித்துச் சிதறும் வீடியோ வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.