
கோலாலம்பூர், ஜன 27 – லெஜன்டரி ரைடர்ஸ் (Legendry Riders) மலேசியாவின் ஏற்பாட்டில் கேரித்தீவு (Carey) தெற்கு தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த வசதிக் குறைந்த 61 மாணவர்களுக்கு சீருடை மற்றும் பள்ளி உபகரண பொருட்கள் வாங்குவதற்கு 100 ரிங்கிட்டுக்கான வவுச்சர் வழங்கப்பட்டது. லெஜன்டரி ரைடர்ஸ் (Legendry Riders) மலேசியா கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் T. Jeevanathan ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேரித்தீவு (Carey) தெற்கு தோட்ட தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியை வள்ளியம்மா வரவேற்புரை ஆற்றியதோடு இந்த உதவியின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப சுமையை குறைக்க முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் லெஜன்டரி ரைடர்ஸ் மலேசியா அமைப்பின் தோற்றுவிப்பாளரும் அதன் தலைவருமான மகேந்திரமணியும் உரையாற்றினார். புதிய கல்வி ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதால் சிலாங்கூர் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கான 100 ரிங்கிட் வவுச்சர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களும் கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களின் பொழுதுபோக்கு அமைப்பாக லெஜன்டரி ரைடர்ஸ் இருந்தாலும் இந்திய சமூகத்தை சேர்ந்த வசதிக் குறைந்த மாணவர்களுக்கு கல்விக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கும் திட்டத்தை தாங்கள் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.