
தாவாவ், ஏப்ரல்-7, சபா, தாவாவில் அரிய வகை போர்னியோ பிக்மி யானையின் தலையில்லா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையக் காலத்தில் நடந்துள்ள இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இது கண்டிப்பாக தந்த வேட்டைக்காரர்களின் வேலையாகத்தான் இருக்குமென, சபா வனவிலங்குப் பாதுகாப்புத் துறை கூறியது.
இதையடுத்து உடனடி விசாரணைகள் தொடங்கியிருப்பதாக, அத்துறையின் இயக்குநர் சோஃப்பியான் அபு பாக்கார் கூறினார்.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் எந்தவொரு கொடூரச் செயலுக்கும் சபாவில் இடமில்லை.
எனவே, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்துவோம் என்றார் அவர்.
தலையில்லா யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சபா சுற்றுலா, கலை, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ கிறிஸ்தினா லியூவும் வருத்தம் தெரிவித்தார்.
அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை தமது தரப்பு உறுதிச் செய்யுமென்றார் அவர்.
சபா காடுகளில் தற்போது 1,500 முதல் 2,000 போர்னியோ பிக்மி யானைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
போர்னியோவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த குள்ள யானைகள், சபா வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.