கோலாலம்பூர், பிப்ரவரி-6 – Container எனப்படும் கொள்கலனில் இயங்கி வரும் பஹாங், லாடாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் அவலம் மக்களவையிலும் எதிரொலித்தது.
அரச உரை மீதான விவாதத்தில் பங்கேற்ற சிலாங்கூர், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், அப்பள்ளியின் நிலையைக் கூறி கவலையும் ஏமாற்றமும் தெரிவித்தார்.
இந்த 2025-ஆம் ஆண்டிலும் நாட்டில் ஒரு பள்ளிக் கூடம் கொள்கலனில் இயங்குவது என்பது வேதனைக்குரிய விஷயம் என்றார் அவர்.
இப்படி ஒரு அவல நிலையில் பள்ளிகள் இயங்குவதை இனியும் அனுமதிக்கக் கூடாது; தமிழ்ப் பள்ளிகள் மட்டுமல்ல, மற்ற மொழிப் பள்ளிகளும் சபா, சரவாக் உட்புறப் பகுதிகளிலும் எந்தவொரு பள்ளிக்கும் இந்நிலை ஏற்படக் கூடாது.
எனவே, கல்வி அமைச்சு இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டி வரும்; ஏற்கனவே அரசாங்கத்துக்கான இந்தியர்களின் ஆதரவுக் குறைந்து வருகிறது.
இது போன்ற விஷயங்களுக்கு உரியத் தீர்வு காணவில்லை என்றால், நிலைமை மேலும் மோசமாகுமென கணபதிராவ் எச்சரித்தார்.
அதே விஷயம் தொட்டுப் பேசிய பினாங்கு, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், இதுவொரு 20 ஆண்டு கால பிரச்னை என சுட்டிக் காட்டினார்.
கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுத்திய ஆவன செய்ய அவரும் வலியுறுத்தினார்.