
புது டெல்லி, ஆகஸ்ட்-9- இந்தியப் பொருட்களுக்கு வரலாறு காணாத வகையில் 50% வரி விதித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் கடப்பாட்டை இரு தலைவர்களும் அதன் போது மறுஉறுதிச் செய்தனர்.
இந்நிலையில் இவ்வாண்டு இறுதியில் இந்தியா வரவுள்ள புட்டினை வரவேற்க தாம் ஆவலுடன் இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக 25% வரியை விதிப்பதாக அண்மையில் ட்ரம்ப் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ரஷ்யாவுடன் நெருங்கி பழகும் இந்தியா, அமெரிக்காவுடன் குறைந்த வர்த்தகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என ட்ரம்ப் சினத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால் இந்தியா எப்படியும் இறங்கி வரும் என வாஷிங்டன் எதிர்பார்த்த நிலையில், ரஷ்யாவுடன் இந்தியா மேலும் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தித் தந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
ஏற்கனவே BRICKS அமைப்பில் அவை இடம்பெற்றுள்ளன. இப்படி இந்தியாவும் ரஷ்யாவும் மேலும் நெருங்க நெருங்க, ட்ரம்ப் விரக்தியடைந்து வரியை மேலும் உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.