உலுசிலாங்கூர், டிச 13 – கோலாகுபு பாரு, கம்போங் சுங்கை தாமரில் இருக்கும் கோழி அறுக்கும் மையம் சுகாதார தரமின்றி மற்றும் விதிமுறைக்கு ஏற்ப செயல்படத் தவறியதால் 14 நாட்களுக்கு அதனை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதால் நேற்று அந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதிவரை அந்த மையத்தை மூடுவதற்கான அறிக்கை வழங்கப்பட்டதாக உலுசிலாங்கூர் நகரான்மைக் கழகம் தெரிவித்தது.
கோழி அறுக்கும் மையத்தில் ஆய்வு செய்ததில் அப்பகுதி தூய்மையான நிலையில் இல்லாததோடு , அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றுக்குள் செல்லும் சிறிய ஓடையில் விடப்படுவதும் தெரியவந்தது. மேலும் அங்கு அறுக்கப்படும் கோழிகளின் இறைச்சி கோலாகுபுபாருவில் உலுசிலாங்கூர் நகரான்மைக் கழகத்தின் வர்த்தக லைசென்சை கொண்டிருக்காத பொது சந்தைக்கு அனுப்பிவைக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. மேலும் உலுசிலாங்கூர் நகரான்மைக் கழகத்தின் ஒப்புதல் உறுதிசெய்யப்படும் வரை வணிக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அந்த வளாகத்தின் உரிமையாளருக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டதாக உலுசிலாங்கூர் நகரான்மைக் கழகத்தின் முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.