
வாஷிங்டன், ஏப்ரல்-11, வரலாறு காணாத போட்டியால் அமெரிக்கா – சீனா இடையில் வாணிபப் போர் முற்றி வரும் நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் வரட்டு கௌரவம் பார்ப்பது நிலைமையை மோசமாக்கியுள்ளது.
சீனப் பொருட்களுக்கு 125% வரி என் அமெரிக்காவும், அமெரிக்கப் பொருட்களுக்கு 84% வரி என சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு வரியை புதிய உச்சத்துக்கு உயர்த்தியுள்ளன.
டோனல்ட் டிரம்ப்பும் – சீ சின் பிங்கும் பரம வைரிகள் கிடையாது; இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினாலே பிரச்னைத் தீர்ந்து விடும்.
ஆனால், இருவருமே இறங்கி வர மறுக்கின்றனர்.
டிரம்ப்பின் குணம் ஊரறிந்த இரகசியம்; ஒட்டுமொத்த உலகமும் தன் கண்ணசைவில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்; அப்படிப்பட்டவர் அமெரிக்காவின் நேரெதிர் போட்டியாளரான சீனாவிடம் இறங்கிப் போக வாய்ப்பில்லை.
எனவே தான், சீ சின் பிங் அழைக்கும் வரை மறுபேச்சுக்கு இடமில்லை எனக் கூறிவிட்டாராம்.
‘ஆதிக்க’ குணம் வாய்ந்த சீனா தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்; அதுவரை தம்மை சமாதானம் செய்யும் முயற்சிகள் வேண்டாமென வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கே உத்தரவு பறந்துள்ளதாம்.
தவிர, வரி அறிவிப்பு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அமெரிக்கா சமிக்ஞை காட்டியுள்ளது; பெய்ஜிங் தான் அதனைக் கண்டுகொள்ளவில்லையாம்.
அதற்குக் காரணம் புரியாமலில்லை – சீ சின் பிங், சீனா முதலில் இறங்கி வந்தால் அமெரிக்காவிடம் மண்டியிட்டதற்கு சமமாகி விடும்; அப்படி நடந்தால், தான் ஒரு பலவீனமானத் தலைவர் என உலகம் பேசும் என யோசிக்கிறார்.
‘நீயா நானா’ போட்டியில் இப்படி இருவருமே வரட்டு கௌரவம் பார்ப்பதால், அதிகாரிகளும் தொழில்துறையினரும் கவலையடைந்துள்ளனர்.
உலக வாணிபத்தின் இருபெரும் சக்திகள் இப்படி முறைத்துக் கொண்டால் அதன் தாக்கம் எப்படி இருக்குமென்பது அனைவரும் அறிந்ததே.
எப்படி இருந்தாலும் சீனா இறங்கி வந்து விடுமென்ற டிரம்ப்பின் அசட்டு தைரியமும் கவனிக்கத்தக்கது.
முட்டி மோதிக் கொள்ளும் இரு நாடுகளும், வரக்கூடிய நாட்களில் இன்னும் என்னென்ன செய்யுமோ என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.