
லண்டன், ஜூலை-24- ஜூன் மாத அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த தனது தாயின் சவப்பெட்டியில், வேறொருவரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாக மகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மிதன் பட்டேல் (Mithen Patel) என்பவர், அந்த விமான விபத்தில் தாய் ஷோபனா பட்டேலையும் தந்தை அஷோக் பட்டேலையும் பறிகொடுத்தார்.
மகன்களையும் பேரப்பிள்ளைகளையும் பார்ப்பதற்காக அத்தம்பதியர் லண்டன் பயணமான போது துர்மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், லண்டன் வந்து சேர்ந்த தனது தாயின் சவப்பெட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் கலந்து வைக்கப்பட்டிருந்ததை, மரண விசாரணை அதிகாரி உறுதிச் செய்ததாக மிதன் கூறினார்.
விமான விபத்தில் மாண்டோரின் சிதறிய உடல்களை சேகரிக்கும் போது இது போன்ற தவறுகள் நடப்பது இயல்பு தான் என்றாலும், அதிகாரிகள் இன்னும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கலாம்.
சவப்பெட்டியில் இன்னும் எத்தனைப் பேரது உடல் பாகங்கள் உள்ளன என்பது தெரியாமல் எப்படி இறுதி காரியங்களைச் செய்வது என மிதன் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக லண்டன் அனுப்பப்பட்ட 2 சடலங்கள் இதுபோன்ற பிரச்னையில் சிக்கியதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஒரு சம்பவத்தில் முழு சடலமும் தவறுதலாக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னொரு சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரின் சிதறிய உடல் பாகங்கள் ஒரே சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து கருத்துரைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, பிரிட்டன் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகக் கூறியது.
நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே சம்பவ இடத்தில் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன; தொழில்தர்மத்தோடு தான் அனைத்து சடலங்களும் கையாளப்பட்டன.
இருந்தாலும் இப்புகார்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணைகளை நடத்த இந்திய வெளியுறவுத்துறை உறுதியளித்துள்ளது.