
கோலாலம்பூர், டிசம்பர்-11, இணையப் பகடிவதையால் பறிபோன ஏஷா எனும் ராஜேஸ்வரி அப்பாவுவின் உயிரை திரும்ப கொண்டு வர முடியாதென்றாலும், அது போன்ற சம்பவங்கள் மீண்டுமொரு முறை நிகழாதிருப்பதை உறுதிச் செய்ய சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதை விட முக்கியமாக, குற்றவியல் சட்டத் திருத்தத்தில் 507D(2) உட்பிரிவுக்கு ‘ஏஷா பிரிவு’ (Esha Clause) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட் அவ்வாறுக் கூறியுள்ளார்.
அந்த ‘ஏஷா சட்டப் பிரிவு’ வெறும் பெயரல்ல; அவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கச் செய்யும் முன்னெடுப்புகளின் தொடக்கமாகும்.
இனி யாரும் இணையப் பகடிவதையால் பாதிக்கப்படக் கூடாது; இன்னோரு ஏஷாவை நாம் இழக்கக் கூடாது என்பதால், இணையப் பகடிவதைக்கான போராட்டத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக அசாலீனா சொன்னார்.
முன்னதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அப்புதியச் சட்டத் திருத்தத்தில், பகடிவதைக் குற்றங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு தாங்காத மன உளைச்சலையும், தொந்தரவையும், பயத்தையும், மன அமைதியின்மையையும் ஏற்படுத்தும் சந்தேக நபர்களின் அடையாளங்கள் மற்றும் விவரங்களை, பொதுவில் பகிரங்கப்படுத்த அச்சட்டத் திருத்தம் வகை செய்கிறது.
இந்த 507D(2) உட்பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு ஓராண்டு வரையில் நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அதுவே, ஒருவரை தற்கொலை முயற்சிக்கோ அல்லது தற்கொலைக்கோ தூண்டினால், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
சமூக ஊடகப் பிரபலமான ஏஷா, டிக் டோக்கில் சந்தித்த பகடிவதையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஏஷாவின் மரணம் நாட்டில் இணையப் பகடிவதை மீதான விழிப்புணர்வை எழச் செய்த நிலையில், இன்று சட்டப் பிரிவுக்கு அவரின் பெயரைச் சூட்டி அரசாங்கம் மரியாதை செய்துள்ளது.