
ஜோகூர் பாரு, மார்ச்-18 – ஜோகூர் பாருவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் வாகன நிறுத்துமிடங்களுக்கு எதிரான அதிரடிச் சோதனைகளில், வெளிநாட்டு ஆடவர் உள்ளிட்ட ஐவர் கைதாகியுள்ளனர்.
அந்த சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்கள் பொது அமைதிக்கு இடையூறாகவும் சாலைப் பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக பொது மக்கள் புகாரளித்திருந்தனர்.
இதையடுத்தே நேற்றிரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை Jalan Wong Ah Fook மற்றும் Jalan Ibrahim சாலைகளில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதானோர் 29 முதல் 53 வயதிலானவர்கள் ஆவர்.
வாகன நிறுத்துமிடக் கட்டணம் என்ற பெயரில் பொது மக்களிடம் அவர்கள் சட்டவிரோதமாக பணம் வசூலித்துள்ளனர்.
அப்படி வசூலிக்கப்பட்ட 20 ரிங்கிட் நோட்டை, ஆதாரமாக போலீஸ் பறிமுதல் செய்தது.
இது போன்ற சட்ட விரோத பண வசூலிப்பைப் பார்த்துக் கொண்டு போலீஸ் அமைதியாக இருக்காது என, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் எச்சரித்தார்.
இத்தகைய அதிரடிச் சோதனைகள் தொடருமெனக் கூறிய ரவூப், பொது மக்களும் தைரியமாக முன்வந்து புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.