
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-24 – கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நூரை 2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அவதூறு செய்திருப்பதை, அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
REE எனப்படும் அரிய மண் தாது வளங்களை சனுசி திருடியதாகவும், MARRIS என்றழைக்கப்படும் மலேசிய சாலைப் பதிவுகளின் தகவல் முறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாகவும் சைஃபுடின் பேசியிருந்தார்.
அனுமானத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அக்கூற்றுகளால் சனுசியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதற்கு இழப்பீடாக சனுசிக்கு 600,000 ரிங்கிட்டையும், செலவுத் தொகையாக 70,000 ரிங்கிட்டையும் சைஃபுடின் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம், 14 நாட்களுக்குள் ஒரு மலாய் பத்திரிகை 1 ஆங்கில பத்திரிகையில் சனுசியிடம் சைஃபுடின் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சனுசியிடம் அனுமதி வாங்கியப் பிறகே அந்த மன்னிப்பு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என நிபந்தனை விதித்த நீதிபதி, அக்குற்றச்சாட்டுகளை சைஃபுடின் திரும்பவும் கூற தடை விதித்தார்.
2023-ல் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரங்களின் போது சைஃபுடின், தம்மை அவதூறாக பேசியதாக சனுசி அவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.