செந்தோசா, டிசம்பர்-27, சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக விமான நிலையத்தில் பிரத்தியேக பாதைகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மலேசிய விமான நிலைய நிறுவனமான MAHB, குடிநுழைவுத் துறை, Malaysia Airlines, Air Asia, Batik Air ஆகியத் தரப்புகளின் ஒத்துழைப்பு இதில் நாடப்படுகிறது.
மேற்கண்ட தரப்புகளிடம் பேசி போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அதற்கு ஆவண செய்ய வேண்டுமென, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
வரும் ஜனவரி 1 முதல் 11 வரை 50,000-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைப் பயணமாகின்றனர்.
கடுமையான விரதமிருப்பதால் அவர்கள் காலணியோ செருப்போ அணிவதில்லை.
தவிர, பக்தர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாகவும் உடல் சோச்வுற்றவர்களாகவும் இருப்பதால், பயணம் நெடுகிலும் அவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை.
ஆக இவர்களுக்கு பிரத்தியேகப் பாதைகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், விமான நிலையத்தில் நெரிசலைக் குறைக்க முடியும்.
Dr குணராஜ் வாயிலாக மலேசிய ஐயப்பசுவாமி சேவை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.உவராஜா குருசாமி அக்கோரிக்கையை முன் வைத்தார்.
ஐயப்ப பக்தர்களுக்குத் தனிப் பாதைகள் அமைத்து முன் கூட்டியே விமானத்திலேற வசதி செய்து கொடுப்பதன் முலம் அவர்களின் யாத்திரை சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்ய முடியும்.
எனவே இந்தக் கோரிக்கையை அமைச்சர் அந்தோனி லோக் நன்கு பரிசீலித்து நல்ல முடிவை எடுப்பார் என Dr குணராஜ் நம்பிக்கைத் தெரிவித்தார்.