
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – மடானி அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைக் கண்காணிக்கவும், தனது ஒவ்வொரு செயலுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்பதை உறுதிச் செய்யவும் ஏதுவாக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒன்றிணைந்து செயல்பட 12 எதிர்கட்சிகள் இணங்கியுள்ளன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் வாக்குறுதிகளையும் கண்காணிப்போம் என, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.
பெர்சாத்து, பாஸ், கெராக்கான், பெஜுவாங், மூடா, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP, ராமசாமியின் உரிமைக் கட்சி, வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி, தேசிய இந்திய முஸ்லீம் கூட்டணியான Iman, Putra, Berjasa உள்ளிட்டவை அக்கட்சிகளாகும்.
இந்த அதிகாரப்பூர்வமற்ற கூட்டணியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் முஹிடின் சொன்னார்.
இது, பதிவுப்பெற்ற அரசியல் கூட்டணி அல்ல என்பதையும் அந்த முன்னாள் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
பெரிக்காத்தானுக்கு வெளியே இருந்தாலும், மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் வகையில் அக்கட்சியின் தலைவர்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கம் என்றார் அவர்.
மற்ற எந்த உள்நோக்கமும் இல்லை என அவர் சொன்னார்.
16-ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராக ஏதுவாக, ஒன்றுபட்ட எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கும் பொறுப்பை பெர்சாத்து மற்றும் பெரிக்காத்தான் உச்சமன்றங்கள் முன்னதாக முஹிடினுக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.