
கோத்தா கினாபாலு, மார்ச்-16 – மனுக்கான் தீவில் கடலாமை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை, சபா சுற்றுலா, பண்பாடு, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கண்டித்துள்ளார்.
வைரல் வீடியோவில் காணப்படுபவர்களின் செயல்கள் பொறுப்பற்றவை என்பதோடு கடல் பாதுகாப்பு கொள்கைகளுக்கு எதிரானவை என கிறிஸ்தினா லியூ சாடினார்.
எனவே 1984-ஆம் ஆண்டு பூங்கா சட்டத்தின் கீழ் அவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடலாமையைத் துன்புறுத்திய 5 ஆழ்கடல் முக்குளிப்பாளர்களுக்கும், சுற்றுலா நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகளும், தங்களது ஊழியர்களும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வதை உறுதிச் செய்யுமாறு, அனைத்து சுற்றுலா நிறுவனங்களையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நிர்ணயிக்கப்பட்ட பூங்கா பகுதிகளுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருந்தாலும் சரி, வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்துவதில் சபா அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என கிறிஸ்தினா திட்டவட்டமாகக் கூறினார்.
வைரலான வீடியோவில், முக்குளிப்பாளர்கள் ஒரு கடலாமையைப் பிடித்து தொந்தரவு செய்வதைக் காண முடிகிறது.
அதனை இயற்கை ஆர்வலர்களும் முன்னதாகக் கண்டித்திருந்தனர்.