
பத்து ஃபெரிங்கி, ஏப்ரல்-16, சொங்க்ரான் நீர் திருவிழாவின் போது பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் பெண்கள் அரை நிர்வாண ஆட்டம் போட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
கவர்ச்சிகரமான ஆடைகளில் அவர்கள் ஆடிய வீடியோக்கள் வைரலாகியிருப்பதை, பத்து ஃபெரிங்கி, Ar-Rahman Masjid Jamek பள்ளிவாசல் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஓர் உணவகத்தின் மீது நின்று கொண்டு அப்பெண்கள் அநாகரீகமாக ஆட்டம் போட்டது, பொது மக்கள் குறிப்பாக முஸ்லீம்களின் உணர்ச்சிகளை மதிக்காத செயல் என, அப்பள்ளிவாசலின் தலைவர் இஸ்மாயில் டின் கூறினார்.
பல தரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் பத்து ஃபெரிங்கி கடற்கரையின் பெயரை கெடுக்கும் வகையில் அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல் உள்ளது.
இதனை தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.
இது போன்ற ‘அரைகுறை’ நிகழ்ச்சிகளுக்கு பெர்மிட்டை வெளியிடும் முன்னர் ஊராட்சி மன்றங்கள் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென இஸ்மாயில் சொன்னார்.
அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் அந்த உணவகத்தில் ஆட்டம் போடும் 37 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது.
பள்ளிவாசலுக்கு 50 மீட்டர் தூரத்திலேயே அவ்வுணவகம் அமைந்திருப்பதால், வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.