புத்ராஜெயா, டிசம்பர்-12 – தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், சம்பளம் வாங்குவதில்லை என்ற தமது வாக்குறுதியை இன்னமும் காப்பாற்றி வருகிறார்.
15-வது பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுங்கை பூலோ வாக்காளர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி அதுவாகும்.
மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், துணையமைச்சருக்கான சம்பளம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலவன்ஸ் தொகையை அவர் வாங்குவதில்லை.
இதுவரை தனக்கு சேர வேண்டிய 550,000 ரிங்கிட்டை, அவர் சுங்கை பூலோவில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட மசூதிகள், இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், சீனக் கோவில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும், அங்குள்ள B40 மக்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.
“சம்பளம் வாங்குவதில்லை என்ற எனது முடிவு மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிக்கும் என்பதால், நான் சந்திக்காத எதிர்ப்புகள் இல்லை, பேச்சுக்கள் இல்லை; ஆனால், வாக்குக் கொடுத்து விட்டால் அதைக் காப்பாற்றியாக வேண்டும். அதிலிருந்து பின் வாங்க மாட்டேன்” என புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இது விளம்பரம் தேடும் முயற்சியல்ல; மக்களுக்கான சேவை என்றார் அவர்.
மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்குப் போராடுவதில், மறைந்த ம.இ.கா தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவே தமக்கு முன்மாதிரி என்றும் ரமணன் புகழாரம் சூட்டினார்.
சமுதாயத்திற்காக முன் நிற்பதில் சாமிவேலுவின் தைரியத்திற்கு நிகர் சாமிவேலுவே என்றார் அவர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் ரமணன் பாராட்டத் தவறவில்லை.
என்றுமே மக்களைப் பற்றியும் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியுமே சிந்திக்கும் பிரதமருக்கு, ‘results with action’ அதாவது செயலுடன் முடிவுகள் என்ற கொள்கையில் தான் அக்கறை.
அரசியல் விளையாட்டுகளில் அவருக்கு ஆர்வம் இல்லை என ரமணன் சொன்னார்.
இதனிடையே அடுத்த PKR கட்சித் தேர்தலில் ஓர் உயர்மட்ட பதவிக்குப் போட்டியிடப் போவதை ரமணன் கோடி காட்டினார்; ஆனால், அது எந்த பதவி என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
எது எப்படி இருப்பினும், 31 தொகுதிகளுக்கு இந்தியர்களைத் தலைவர்களாகக் கொண்டுள்ள PKR கட்சியே, இந்நாட்டு இந்தியர்களின் உரிமைக் குரலாக விளங்க உகந்த கட்சி என்றார் அவர்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளரான தேசிய முன்னணியின் கைரி ஜமாலுடினைத் தோற்கடித்ததிலிருந்து, முன்னணி இளம் தலைவர்களில் ஒருவராக டத்தோ ஸ்ரீ ரமணன் வலம் வருகிறார்.