
அலோர் ஸ்டார், ஜூன்-6 – ஹஜ் பெருநாளுக்காக சொந்த ஊருக்குக் கிளம்பிய 3 மாணவர்கள் கெடா, அலோர் ஸ்டாரில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
IKBN எனப்படும் ஜித்ரா தேசிய இளையோர் திறன் கழகத்தைச் சேர்ந்த 19 வயது Habil Sobri, Fahmi Jamel, Arif Aifan ஆகியோரே அம்மூவராவர்.
மற்றொரு நண்பரான Adib Aiman Hasani காயங்களுடன் உயிர் தப்பினார்.
நேற்று பிற்பகலில் Yamaha 135LC மற்றும் Yamaha Y16ZR மோட்டார் சைக்கிள்களில் நண்பர்கள் நால்வரும் பயணித்துள்ளனர்.
அப்போது PLUS நெடுஞ்சாலையின் 49.4-ஆவது கிலோ மீட்டரில் Yamaha 135LC கட்டுப்பாட்டை இழந்து, அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Naza Citra காரை மோதியது.
பின்னால் வந்த Yamaha Y16ZR மோட்டார் சைக்கிளும், மோதலைத் தவிர்க்க முடியாமல் முன்னே இருந்த மோட்டார் சைக்கிளோடு மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
Naza காரின் ஓட்டுநரும் அதிலிருந்த பயணியும் காயமடையவில்லை.
காரோட்டுநர் விசாரணைக்காக கைதான வேளை, மரணமடைந்த மாணவர்களின் சடலங்கள் சவப்பரிசோதனைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.