
சரவாக் பிந்துலு (Bintulu) வட்டாரத்தில் Pekan Sangan னில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 30 குடிசை வீடுகள் அழிந்ததோடு ஒருவர் கருகி மாண்டார்.
எனினும் இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லையென தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரவு 11.18 மணிக்கு தங்களது தரப்பினருக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து , Tatau தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திறகு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்குள்ள Sangan Iban தேசிய பள்ளிக்கு அருகே குடிசை வீடுகளில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாலை மணி 2.36 அளவில் ஒரு வீட்டிலிருந்து கருகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆற்றுக்கு அப்பால் உள்ள வீடுகளில் இந்த தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு செல்வதற்கு சாலை வசதி இல்லையென்பதால் கிராம மக்களின் படகுகளில் தீயணைப்பு சாதனங்களை ஏற்றிக்கொண்டு தீயணைப்பு வீரர்கள் அந்த ஆற்றைக் கடந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவரும் வேளையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் திரட்டப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.



