
ஜோர்ஜ் டவுன், செப் 18 – பினாங்கு , தஞ்சோங் பூங்கா ஜாலான் கொன்கோர்ட்டில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக சேதம் அடைந்தது . இன்று விடியற்காலை மணி 4.09 அளவில் தங்களது தரப்புக்கு இது தொடர்பாக தகவல் கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் ( John Sagun Francis ) தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகான் ஜெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் அறுவர் கொண்ட உறுப்பினர்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிசான் செரினா கார் மீது விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு சிறப்பு சாதனத்தை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தினர். 1.5 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கு அவர்களுக்கு 45 நிமிடங்கள் பிடித்தன. இந்த நடவடிக்கைக்கு தஞ்சோங் பூங்கா பொது தற்காப்பு படையைச் சேர்ந்த உறுப்பினர்களும் உதவினர்.