
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – ‘கெலிங்கிற்கு சோளம் விற்பனையில்லை’ என அட்டையில் எழுதி வைத்து சர்ச்சையில் சிக்கிய சோள வியாபாரி, ஒரு வழியாக மன்னிப்புக் கேட்டு பதற்றத்தைத் தணித்துள்ளார்.
வெளிப்படையாக இந்தியர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்டதை வரவேற்கிறேன்; ஆனால் மன்னிப்பு மட்டுமே போதுமா என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான MAHIMA-வின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கொலைக் குற்றவாளி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு விட்டால் அதோடு பிரச்னை தீர்ந்தது என விட்டு விடுவோமா?
ஏற்கனவே கூறியபடி இது 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனையாகும்; அதற்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் தான் இனியும் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என சிவகுமார் கூறினார்.
மன்னிப்புப் போதாது என இந்த விஷயத்தில் அதே கடுமையான நிலைபாட்டை வலியுறுத்தியுள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr அக்மால் சாலேவின் நிலைப்பாட்டை இந்த நேரத்தில் வரவேற்க வேண்டும்.
இனத்துவேச குற்றங்களைப் புரிவோரை, ஆள் யார் என்று பார்க்காமல் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென அக்மால் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இவ்விஷயத்தில் முன்னால் வந்து நிற்க வேண்டிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதிக் காக்கிறது என்றார் அவர்.
மன்னிப்புக் கேட்டிருந்தாலும் அந்த சோள வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. இத்தகைய இனவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என சிவகுமார் தெளிவுப்படுத்தினார்.