சிறப்புக் காட்சியுடன் விஜய் சேதுபதியின் ‘Ace’ திரைப்படத்தின் பிரமாண்ட வெளியீடு

கோலாலம்பூர், மே-24 – நடிகர் விஜய் சேதுபதி, ருக்மிணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘Ace’ திரைப்படம் மலேசியா உட்பட உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் நேற்று வெளியீடு கண்டது.
‘7GS Entertainment’ மற்றும் ‘Veedu Productions’ இப்படத்தின் மலேசிய விநியோகஸ்தர்கள் ஆவர்.
இந்நிலையில் அதன் பிரமாண்ட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் LFS PJ STATE திரையரங்கில் நேற்றிரவு சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்திலிருந்து பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ், நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் டத்தோ டி. மோகன், Creative Industries Consultants நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ காமில் ஒத்மான், மலேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS-சின் முன்னாள் இயக்குநர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் சிறப்பு வருகைப் புரிந்தனர்.
சிறப்புப் காட்சிக்கு ஏற்பாடு செய்த Veedu Productions வந்திருந்த பிரமுகர்களுக்கும் சிறப்புசெய்தது.
ஏராளமான உள்ளூர் கலைஞர்களும் பிரபலங்களும் வந்திருந்த இந்நிகழ்வுக்கு Junior Kuppana, Madras Bakery ஆகியவை உணவு ஆதரவை வழங்கின.
ஆறுமுகக்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் பெரும் பகுதி மலேசியாவில் படமாக்கப்பட்டதாகும்.
இதனால் பல உள்ளூர் கலைஞர்களுக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
டெனிஸ் குமார், அல்வின் மார்டின், கார்த்திக் ஜெய், பிரிசிலா நாயர், சாந்தினி கவுர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
தமிழ் திரைப்படத்தில் அதுவும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி படத்தில் நடித்த அனுபவத்தை மலேசியக் கலைஞர்கள் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
புது வாழ்வு தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் கண்ணன் அங்கு வட்டி முதலைகள் வட்டத்தில் சிக்கி சந்திக்கும் சவால்களை இப்படம் மையக் கருவாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் பிரபலங்கள் பலரும் படத்தைப் பெரிதும் பாராட்டினர்.
குடும்பத்தோடு சென்று காணக்கூடிய மிகச் சிறந்த படைப்பான ‘Ace’ உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
வாரக் கடைசி விடுமுறையில் நீங்களும் உங்கள் குடும்பத்தோடு சென்று படத்தை கண்டு களிக்கலாமே…