
புத்ராஜெயா, மார்ச்-19 – முஸ்லீம் அல்லாத வயது குறைந்த குழந்தைகள் இரகசியமாக இஸ்லாத்திற்கு மதம் மாறுவதை ஊக்குவிக்கும் வீடியோவை நீக்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி, ஃபிர்டாவுஸ் வோங் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அந்த மதபோதகர் மீது தொடரப்பட்ட வழக்கில் 8 முஸ்லீம் அல்லாத பெற்றோர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் எம். விஸ்வநாதன், அதனை உறுதிப்படுத்தினார்.
மேல்முறையீட்டு மனுவின் நகலை தனது நிறுவனம் பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.
எனினும் மேல்முறையீட்டை செவிமெடுப்பதற்கான தேதியை நீதிமன்றம் இன்னும் முடிவுச் செய்யவில்லை.
இரகசியமாக இஸ்லாத்திற்கு மாற விரும்பும் சிறார்களின் கோரிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒருவருக்கு அறிவுறுத்தும் வீடியோவை, ஃபிர்டாவுஸ் வோங் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியிட்டார்.
அது சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர் மீது ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணையும் தொடங்கியது.
இந்நிலையில் ஃபிர்டாவுஸ் மீது வழக்குத் தொடுத்த 8 பெற்றோர்கள், அவர் சட்டவிரோதமாக நடந்துகொண்டதாக நீதிமன்றம் அறிப்பதோடு, வீடியோவை நிரந்தரமாக நீக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க அவரை கட்டாயப்படுத்த தடை உத்தரவையும் கோருகின்றனர்.