கோலாலம்பூர், டிச 24 – குழந்தைகளுடன் அற்புதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி அண்மையில் கோலாலம்பூர் ஜாலான் செராஸ் முன்றரை மைலில் உள்ள Amber வர்த்தக பிளாசா 2 இல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியல் 60 சிறார்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குழந்தைகள் மற்றும் சிறார்களுடன் மேலும் மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வரவேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதோடு இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கத்தில் 100 பேருக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த உதவிப் பொருட்களை தொழில் முனைவர் மேம்பாடு , கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கியிருந்தார்.
மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் ஆகியோரும் முழுமையான ஆதரவு வழங்கியிருந்தனர்.
Masyarakat satu Khemah என்ற இயக்கத்தின் தலைவர் ஜோனதன் வெலா ( Jonathan Vela ) தலைமையில் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வசதிக்குறைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் அவர்களது பெருநாள் சிரமத்தை குறைப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்துவரும் பெருநாள் காலங்களில் மேலும் அதிகமானோருக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என ஜோனதன் வெலா கூறினார்.