கோலாலம்பூர், நவம்பர்-6 – நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இடநெரிசல் பிரச்னை மோசமாகி வருவதை அடுத்து முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வீட்டுக் காவல் சட்டத்தை, மலேசிய சிறைச்சாலைத் துறை வரவேற்றிருக்கிறது.
நேற்று வரைக்குமான நிலவரப்படி, மலேசிய சிறைச்சாலைகளில் ஒட்டுமொத்தமாக 87,419 கைதிகள் தங்கியுள்ளனர்.
முழு கொள்ளளவு 82,482 பேர் மட்டுமே என்ற நிலையில், அதை விட 11.24 விழுக்காடு அதிகமானோர் நம் சிறைச்சாலைகளில் நிரம்பி வழிகின்றனர்.
மலேசியாவில் சிறைத்தண்டனை விகிதம் 100,000 பேருக்கு 245 பேராக இருக்கிறது.
உலக சராசரியான 100,000 பேருக்கு 145 பேர் என்ற விகிதத்தை விட, இது அதிகமென்பதை சிறைச்சாலைத் துறை சுட்டிக் காட்டியது.
சிறைச்சாலைகள் குறிப்பாக நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் பிரச்னை மோசமாகியிருப்பதால், வசதி கட்டமைப்பில் அது பெரும் அழுத்ததை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, 43 சிறார் சீர்திருத்த மையங்களில் 19 மையங்கள் அவற்றின் கொள்ளளவை 20 விழுக்காடு தாண்டியுள்ளன.
இது, சிறை மேலாண்மையை மட்டும் பாதிக்கவில்லை; பொது பாதுகாப்புக்கும் உலகளவில் நாட்டின் நற்பெயருக்கும் பங்கம் விளைவிக்கும் என அத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியது.
குறிப்பிட்ட குற்றங்களுக்கு மாற்று தண்டனையாக வீட்டுக் காவலை அறிமுகப்படுத்தும் புதியச் சட்டம் இயற்றப்படவிருப்பதாக, 2025 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.