
ஷா ஆலாம், மார்ச்-24 – ஏப்ரல் 1 முதல், சிலாங்கூரின் நிரந்தர வனப்பகுதிகளுக்குள் பொழுதுபோக்கு மற்றும் மலையேற்ற நடவடிக்கைகளுக்கான அனுமதி விண்ணப்பங்கள், இணையம் வாயிலாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்விண்ணப்பங்கள் சிலாங்கூர் வனத்துறையின் மின்-அனுமதி முறையான SeForest வழியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, மாநில வனத்துறை தனது இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.
வருகையாளர்கள், குறைந்தது 48 மணி நேரங்களுக்கு முன்பே தங்களது அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்; ஒப்புதல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் கட்டணத்தைச் செலுத்தி விட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
SEFOREST மின்னியல் அமைப்பு வழியாக ePermit மின் அனுமதியைப் பயன்படுத்துவதற்கான விளக்கப்படத்தையும் அது பகிர்ந்துள்ளது.
அதன்படி, அனுமதி இல்லாமல் நிரந்தர வனப்பகுதிக்குள் நுழைவது 1984-ஆம் ஆண்டு தேசிய வனவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 30,000 ரிங்கிட் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.