தெலுக் இந்தான், ஜனவரி-21- சீனப் புத்தாண்டை ஒட்டி, விழாக் கால விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 பொருட்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
தீபகற்ப மலேசியாவுக்கு சிவப்பு மிளகாய், பெரிய மஞ்சள் வெங்காயம், இறக்குமதியான பெரிய சிவப்பு வெங்காயம், கட்டை கடுகுக் கீரையும், சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு கோழி இறக்கையும் சேர்க்கப்பட்டுள்ளன.
KPDN எனப்படும் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு இன்று அதனை அறிவித்தது.
பயனீட்டாளர்கள், வியாபாரிகள் என இரு தரப்புக்குமே தோதுவான வகையில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் டத்தோ அர்மிசான் மொஹமட் அலி (Datuk Armizan Mohd Ali) தெரிவித்தார்.
அவ்விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் வெள்ளை வௌவால் மீன், வெள்ளை இறால், இறக்குமதி செய்யப்பட்ட வட்ட முட்டைகோஸ், உயிருள்ள பன்றி, பன்றி இறைச்சியும் கொழுப்பும் உட்பட ஏற்கனவே 11 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பொருட்களின் விலைகளை KPDN இணைய அகப்பக்கத்தில் சரிபார்க்கலாம்.
இவ்வேளையில், விழாக் கால மடானி ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்தையும் அமைச்சு தொடருகிறது.
சீனப் பெருநாளுக்காக, ஜனவரி 20 வரை நாடு முழுவதும் அத்தகைய 472 விற்பனைகள் நடைபெற்றதாக அமைச்சர் சொன்னார்.
பேராக், தெலுக் இந்தானில் மடானி மலிவு விற்பனை மற்றும் விலைக் கட்டுப்பாட்டுப் பொருட்களை அறிவித்த போது டத்தோ அர்மிசான் அவ்வாறு கூறினார்.